Wednesday, May 15, 2013

ஜெயலலிதா தலைமையில் தமிழகம்: இரண்டு வருடங்கள்



மரக்காணத்தில் வீடுகள் சூறையாடப்பட்டு அநீதி செய்யப்பட்ட தலித்துகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, தர்மத்தை நிலைநாட்டிய தலைவராகத் தெரிகிறார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், “தமிழக முதல்வர் சாதியைப் பார்க்க மாட்டார்; நீதியையே பார்ப்பார்” என்று தெரிவித்த நம்பிக்கை வீண் போகவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ”உண்மையை உரத்துச் சொன்ன முதலமைச்சருக்கு நன்றி” என்று வழங்கிய பாராட்டுரையால் இது மேலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவது எளியோரின் ஆதரவினால்தான்; எளியோரின் ஏகோபித்த ஆதரவுடன் அரசை அமைக்கும் ஆட்சியாளர்கள் காலப்போக்கில் சமூகத்தின் ஆதிக்க சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு தங்களை அரியணை ஏற்றிய மக்களை மறந்துவிடுவதுண்டு; அதனால் அவர்கள் வீழ்ந்ததும் உண்டு. கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் ஜெயலலிதா தனக்கு முடிசூடிய மக்களை மறந்தாரில்லை. வரும் வருடங்களில் ஜெயலலிதா தன்னை அரியாசனம் ஏற்றியவர்களை மறந்தால் யார் சமூகத்தில் மெலியோராக இருக்கிறார்களோ அவர்களே அவரை ஆட்சியிலிருந்து அகற்றி விடுவார்கள்.

மத்திய அரசின் தொடரும் தாராளமய பொருளாதாரக் கொள்கையால், சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்பது தமிழ்நாட்டின் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விடும் அபாயம் பூதாகரமாக உருவெடுத்தது. இந்த நிலையில், சென்னை வானகரத்தில் பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனமான வால் மார்ட்டுக்கு சீல் வைத்தது வணிகர்களால் பாராட்டப்பட்ட உறுதியான நடவடிக்கையாக அமைந்தது. அதேபோல, தென் தமிழகத்தின் தொழில்முனைவு மிக்க நாடார் சமூகம் குறித்து சி.பி.எஸ்.இ பாடநூலில் இடம்பெற்ற அவதூறான கருத்துக்களை நீக்குவதிலும் தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றி கண்டிருக்கிறது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் வரைக்கும் அரசுக்கு இருக்கும் செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

நடிகர் கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தில் தமிழ்நாட்டு முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகளை அகற்ற வேண்டும் என்பதில் முதல்வர் மிகுந்த உறுதியுடன் இருந்தார். பெண் அரசியல் தலைவர்களை சகியாமையின் உருவங்களாக சித்தரிக்கும், முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காத, சினிமா நட்சத்திரங்களுக்கு காவடி தூக்கும் வட இந்திய மற்றும் ஆங்கில ஊடகங்கள் கமலுக்கு ஆதரவாக வரிந்துகட்டி நின்றபோதும், முதல்வர் தன் நிலையிலிருந்து பின்வாங்கவில்லை. அதே சமயம் பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மனித உரிமைக் கோணத்திலும் கருணையுடனும் முதல்வர் அணுக வேண்டும். பெங்களூரு பாரதிய ஜனதா அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தமிழக முஸ்லிம் இளைஞர்களை ஆதாரமில்லாமல் கைது செய்ததில் நியாயமான ஐயங்கள் எழுந்துள்ளதால், கர்நாடக காவல் துறையின் செயல்பாட்டில் முதலமைச்சர் இன்னும் வலுவாக தலையிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு முஸ்லிம் சமூகத்திடம் பரவலாக இருக்கிறது.

காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்ததுதான் தனது முப்பதாண்டு அரசியல் வாழ்வில் மிகப்பெரிய சாதனை என்று சொல்லியிருக்கிறார் முதல்வர். தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பு, கல்வியில் வரலாற்று ரீதியாக வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு 69 சதவீதம் இட ஒதுகீட்டை உறுதி செய்தது ஜெயலலிதா தனது முதல் ஆட்சிக் காலத்தில் நிகழ்த்திய பெரும் வரலாற்றுச் சாதனையாக இருந்தது. அதற்குப் பின்னர் அவருடைய அரசியல் வாழ்வில் நிகழ்ந்த வரலாற்றுத் திருப்புமுனை என்று காவேரியில் தமிழக உரிமை நிலைநாட்டப்பட்ட இந்தத் திருப்பத்தைக் குறிப்பிடலாம்.

கெயில் நிறுவனம், இயற்கை எரிவாயுக் குழாய்களை தமிழ்நாட்டின் ஏழு மேற்கு மாவட்டங்களின் விளைநிலங்களில் பதித்ததை விவசாயிகள் விரும்பவில்லை. முதல்வருக்கு விவசாயிகளின் எதிர்ப்பை சரிவர சொல்லாமல் திட்டத்திற்கு பச்சைக்கொடி வாங்க உதவியவர் முன்னாள் தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி. விவசாயிகளின் எதிர்ப்பை தன்னிடம் சொல்லாமல் மறைத்ததற்காக அவரை அரசின் ஆலோசகர் பொறுப்பிலிருந்தும் விலக்கிவிட்டார் முதல்வர். விளைநிலங்கள் வழியாக அல்லாமல் தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்களைப் பதிக்கட்டும் என்ற முடிவை எடுத்ததன் மூலம் 60,000 ஏக்கருக்கும் மேலான விளைநிலங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

தனித் தமிழ் ஈழம் குறித்த சட்டப்பேரவைத் தீர்மானம், இலங்கை மீது பொருளாதாரத் தடை கோரும் சட்டப்பேரவைத் தீர்மானம் போன்றவை 2009 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா ஈழத்தமிழர் பிரச்சினையில் நிலையான நிலைப்பாடு கொண்டுள்ளதை உறுதி செய்கிறது. இலங்கையின் தடகள வீரர்கள் பங்கேற்பதால் சென்னையில் நடைபெறவிருந்த ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த முடியாது என்று சொன்ன துணிவு உலகமெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்களால் பாராட்டப்பட்டது. சென்னையில் நடக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள், பணியாளர்கள் பங்கேற்பதை தமிழக அரசு அனுமதியாது என்று எச்சரித்து அதனை நடத்திக் காட்டியது, இலங்கையின் இப்போதைய ஆட்சியாளர்களின் போர்க் குற்றங்கள் பற்றிய சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது மற்றொரு முக்கியமான வரலாற்றுத் தருணம்.

ஏழைகளின் பசி போக்க ஒரு ரூபாய்க்கு இட்லி, மூன்று ரூபாய்க்கு தயிர் சாதம், ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம் வழங்கும் மலிவு விலை உணவகங்கள் சென்னை மாநகரின் தீராத வறுமைக்கு நல்ல வடிகாலாக அமைந்திருக்கின்றன. இதே திட்டம் ஏனைய ஒன்பது மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. நகர்ப்புற வறுமையை எதிர்கொள்ளும் பெரும் திட்டமாக இது உருவெடுக்கிறது. தானே புயல், நீலம் புயல், வறட்சி ஆகிய பிரச்சினைகளில் சிறந்த பேரிடர் நிர்வாகத் திறமையை ஜெயலலிதா தலைமையிலான அரசு வெளிப்படுத்தியிருக்கிறது.

மின்வெட்டு முழுமையாக சீர் செய்யப்பட்டிருந்தால் தொழிலுக்கு - குறிப்பாக சிறு மற்றும் நடுத்தரத் தொழிலுக்கு - ஆக்கமும் ஊக்கமும் கிடைத்திருக்கும். மின்வெட்டு என்பது கடந்த தி.மு.க ஆட்சியிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட பிரச்சினை என்று ஜெயலலிதா சொல்வது அறிவியல்பூர்வமானது. இருந்தாலும் மெத்தனமான அதிகாரிகளை முடுக்கிவிட்டு, இருக்கும் மின் திட்டங்களை முழுத்திறனில் இயங்கவைக்க வேண்டிய அவசர முக்கியத்துவம் இப்போது உண்டாகியிருக்கிறது.

கனிமவளங்களைத் திருடுவது தொடர்கதையாகத்தான் இருக்கிறது. மணல் திருட்டு என்பது தி.மு.க ஆட்சியிலும் அ.தி.மு.க ஆட்சியிலும் ஒரே முதலாளியால் செய்யப்படுகிறது. கிரனைட் கொள்ளை மீது கடும் நடவடிக்கை எடுத்த முதல்வர், ஆறுமுகச் சாமியையோ, வைகுண்டராஜனையோ இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முடியவில்லை. சந்தை சக்திகள் அரசைவிட உயரத்திற்கு வளர்ந்துவிட்ட உலகமயப் பின்னணியில் இதனைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதே திருட்டை தேசியவாத பெருமுதலாளி டாடா மூலம் செய்வதற்கு கடந்த தி.மு.க ஆட்சி முயற்சி மேற்கொண்டு தோற்றுப் போனது. தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் இவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இருக்கப் போவதில்லை. லஞ்சமும் எந்த ஆட்சியிலும் பெரிதாகக் கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக நிறுவனமயமாகிப் போயிருக்கிறது.

ஜெயலலிதா தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சி புரட்சிக்கு வித்திட்டிருக்கிறது. தந்தி டிவி, புதிய தலைமுறை, ஜி டிவி, சத்தியம் தொலைக்காட்சி, லோட்டஸ் டிவி என்று தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தகவல் புரட்சிக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு வினியோகத்தில் நிலவி வந்த ஏகபோகத்திற்கு எதிரான முதல்வரின் தீர்க்கமான நடவடிக்கைகள் முழுமுதற் காரணம். புதிய திறமைகளுக்கு வெளிச்சம் கிடைத்திருக்கிறது. இந்த ஊடகப் புரட்சியும் சுதந்திரமும் நீடிப்பதை உறுதி செய்யும் பொறுப்பும் கடமையும் முதல்வருக்கு இருக்கிறது. தமிழ் ஊடக வரலாற்றின் இந்தப் பொற்காலம் நீடிக்க வேண்டும். ஏகபோகங்கள் தகர்ந்த காரணத்தால் திரையுலகமும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறது. புதிய திறமைகளுக்கு புதிய வார்ப்புகள் கிடைத்துள்ளன. இந்தச் சுதந்திரமான ஊடகக் களத்தைப் பாதுகாப்பது என்னைப் போன்ற, உங்களைப் போன்ற ஜனநாயகவாதிகளின் கடமை.
- பீர் முகமது

No comments: