Monday, May 13, 2013

புதிய தலைமுறையில் பத்தொன்பது மாதங்கள்



வீட்டாரைக் கேட்காமல் அந்தப் பெண் செய்தது ஒன்றே ஒன்றுதான்; காதல் திருமணம். ’அவள் இறந்துவிட்டாள்; கொடுமுடியில் இறுதிக் காரியம் செய்தாகி விட்டது’ என்று அவரது தந்தை அன்று முதல் எல்லோரிடமும் சொல்லி வந்தார். பெற்றோரைப் பார்க்காமல் இருப்பதுகூட அவளுக்குத் துயரமாக இல்லை. ஆனால் தான் இறந்துவிட்டதாக தகப்பனார் எல்லோரிடமும் சொல்வதை கற்பனை செய்வதே அவளுக்கு உலகின் மீதும் தன் காதல் மீதும் ஓர் ஒவ்வாமையை உண்டாக்கியது. ஆனால் அட்சர சுத்தமாக செய்திகளைத் தொகுத்து வழங்கும் தன் தொழிலில் அவள் சோரம் போகவில்லை, உள்ளூர் தொலைக்காட்சியில் செய்த அந்த வேலையை மாநில அளவில் தொடங்கப்பட்ட அந்த புதிய தொலைக்காட்சியில் செய்வதற்கு அவளுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சிரமேற்கொண்டு கண்ணும் கருத்துமாக செய்தாள். தமிழகமே அவளை உற்றுநோக்கியது. அட்சரம் பிசகாமல் தெள்ளத் தெளிவாக தைரியமாக அவள் செய்தி வழங்குவது இன்று பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. மகளைத் தொலைத்த தந்தை தன் மகளைக் கண்டுபிடித்தார். வீட்டிற்கு வருவோரிடம் ஏன் சாலையில் செல்வோரிடமும் தெரு முனையில் வண்டிக்காக நிற்போரிடமும் “ஏனுங்க உங்களுக்குத் தெரியுமா? என் மகள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தித் தொகுப்பாளர். முடிந்தால் இன்று மாலையில் செய்தி பார்த்துவிட்டு சொல்லுங்கள்’ என்று சொல்லி பெருமிதப்பட்டார். தந்தை தன்னை மீண்டும் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையே இல்லாமலிருந்த அந்தப் பெண்ணுக்கு இது பேரதிசயமாகப்பட்டது. அவளுக்கும் தந்தை மீண்டும் கிடைத்தார்.
அட்சர சுத்தமாக செய்தி வழங்கும் மற்றொரு பெண்ணுக்கு இந்தத் தொலைக்காட்சிக்கு வரும்போது பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. கொஞ்ச நாள் செய்தி வழங்கிவிட்டு மேல்படிப்புக்குப் போய்விடலாம் என்று இருந்தார். ஆனால் இந்தத் தொலைக்காட்சி நிலையத்தை உருவாக்கிய சீனிவாசன் வகுத்திருந்த “சமவாய்ப்பு” கொள்கையும் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலும் அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வைத்தது. இரண்டு ஆண்டுக்காவது இங்கு வேலை செய்ய வேண்டும் என்ற ஈர்ப்பை இந்த அலுவலகம் உருவாக்கியது. பிரச்சினைகள் இல்லாமல் இல்லை; செய்தி அறையில் சிலர் உடனடி செய்திகளைப் பெண்கள் கையாள முடியாது என்ற அணுகுமுறை கொண்டவர்களாக இருந்தார்கள். இதனை அவள் கடுமையாக ஆட்சேபித்தாள். ஜனநாயகப் பூர்வமான விமர்சனத்திற்கு வாராந்தரக் கூட்டங்கள் ஓரளவுக்கு இடமளித்தன. தொலைக்காட்சியின் முகங்களாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் உருவாக சீனிவாசனின் அணுகுமுறை தலையாய காரணமாக அமைந்தது.
சுமார் இரண்டு தசாப்தங்களாக கோலோச்சிய முன்னணி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு பிரிவில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் அவர். அங்கு காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை தினமும் வேலை பார்த்ததால், நோயுற்றிருந்த வயோதிகம் அடைந்த தந்தையை அவரால் அருகிருந்து கவனிக்க முடியவில்லை. தந்தை மரித்துவிட்டார்; இதனால் உருவான குற்ற உணர்வினால், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தயாரிப்புக் கட்டுப்பாட்டு அறையில் ஒரு குறிப்பிட்ட பொறுப்பு மட்டும் போதும் என்று அவர் பணியாற்றி வருகிறார். செய்தியாளர்களதும் தொகுப்பாளர்களதும் முகங்களை உலகிற்குக் காட்டும் பணியை திறம்பட செய்பவர்கள் இவரைப் போன்ற பலரும்தான். இவர்களோடு வெயிலென்றும் புயலென்றும் இரவென்றும் பகலென்றும் பாராமல் பணிபுரியும் ஒளிப்பதிவாளர்கள், செய்தியாளர்கள் சேர்ந்து செய்ததுதான் இந்த சாதனை; இந்த வரலாறு.
தாய்க்குப் பக்கவாதம் வந்த நாளிலும்கூட பணிக்குத் தவறாமல் வந்த செய்தியாளர், தந்தைக்கு பக்கவாதம் வந்த நாளிலும் அலுவலகப் பணியை மறவாத தொழில்நுட்பப் பணியாளர் என்று ஏராளம்பேரின் கடும் உழைப்புதான் இந்த வெற்றியின் ரகசியம். இங்கு நான் தொடர்ந்து பணி செய்ய முடியாத சூழல் வெகு சிலரால் உருவாக்கப்பட்டது. எனக்கு நேர்ந்ததைக் கண்டித்து தார்மீக அடிப்படையில் செய்திகள் பணிகள் குழுவின் தலைவர் பிரேம் சங்கர் விலகியதும் இங்கு பின்னிப் பிணைந்துள்ள பணி உறவுகளின் வெளிப்பாடுதான். நாங்கள் வெளியேற காரணமாக இருந்த வெகு சிலர் அவதூறு பிரச்சாரத்தை முடுக்கி விட்டு எங்களது அடுத்த தொழில் வாய்ப்புகளை கெடுக்கப் பார்த்தார்கள். அதனால் சின்ன அளவில் விளக்கங்கள் அளிக்கும் நிலை உண்டானது. எங்களை வெளியேறச் செய்த அந்த முடிவு புதிய தலைமுறையின் நிர்வாகத்திற்கு உள்ளேயே விமர்சனத்திற்கும் கேள்விக்கும் உட்படுத்தப்பட்டிருப்பது நீதி சாகாது என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது. நம்பிக்கைகள் சோர்ந்திருந்த அந்த மாலை வேளையில் “விழுந்தாலும் விதையாக விழுவோம்; எழுந்தாலும் மலையாக எழுவோம்” என்று அலுவலகத்திலிருந்து தொலைபேசி செய்த அந்தத் தோழியின் வார்த்தைகள் வீண் போகவில்லை.

No comments: