Sunday, January 18, 2015

பெருமாள் முருகனின் மாதொருபாகன்


1. மாதொருபாகன் எதைப் பற்றியது? எதனால் இது சர்ச்சை ஆனது?

பெருமாள் முருகன் எழுதி 2010 ஆம் ஆண்டில் வெளியான நாவல் “மாதொருபாகன்.” ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நிகழும் கதை இது. காளியும் பொன்னாளும் திருமணமாகி பதினான்கு ஆண்டுகளாகக் குழந்தை இல்லை. இரண்டு குடும்பத்தாரும் சேர்ந்து அந்த ஊர் வழக்கப்படி பொன்னாளுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கச் செய்ய ஒரு கடைசி முயற்சி செய்கிறார்கள். கோவில் திருவிழாவின் பதினான்காவது நாள் இரவில் குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் கோவிலுக்குத் தனியே அனுப்பப்படுவது உண்டு. அன்று இரவு வரும் ஆண்களெல்லாம் சாமிகள் என்பது ஐதீகம். பெண் யாரைத் தேர்வு செய்து உடலுறவு வைத்தாலும் அனுமதிக்கப்படுகிறது. குழந்தை பிறந்தால் இதை “சாமியின் குழந்தை” என்று இரண்டு குடும்பங்களும் ஏற்றுக்கொள்வது வழக்கம். இந்த வழக்கம் பற்றிய குறிப்பு சமூகத்தை இழிவுபடுத்துவதாகச் சொல்லி சில அரசியல், சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தின. பெருமாள் முருகனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. பெருமாள் முருகன் எழுதுவதையே விட்டுவிடுவதாக அறிவித்தார்.

2. நாவல் வெளியாகி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு போராட்டம் நடக்கக் காரணம் என்ன?

தமிழ்நாட்டில் இதுபோன்ற சாதி கவுரவ பிரச்னைகளை, மதச்சார்பான பிரச்னைகளைக் கையில் எடுத்து கவனத்தைப் பெறுவதற்கு சில குழுக்கள் முயற்சிக்கலாம்.

3. நாவலுக்கு எதிரான போராட்டமே தவறு என்று சொல்ல முடியுமா?

எந்தச் சமூகக் குழுவும் அரசியல் குழுவும் தனது கருத்துக்களை ஜனநாயகப்பூர்வமாக, பேச்சுவார்த்தை மூலமாக தெரிவிக்கலாம். ஆர்ப்பாட்டம் மூலமாகக் கண்டனத்தை வெளியிடலாம். பெருமாள் முருகனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உயிராபத்தை விளைவிப்பதான அச்சுறுத்தல்தான் ஜனநாயகத்தின் வரம்புகளைக் கடந்தது.

4. இதுபோன்ற சித்தரிப்புகள் இலக்கியத்தில் இயல்பானதா?

அனைவராலும் கொண்டாடப்படும் இதிகாசமான மகாபாரதத்தில் ஒரு நிகழ்வு; விசித்ரருக்கு அம்பிகா, அம்பாலிகா என்று இரு மனைவிகள். அம்பிகாவுக்கு திருதிராஷ்டிரரும் அம்பாலிகாவுக்கு பாண்டுவும் பிறந்தது வியாச முனிவரால்தான் என்று காவியம் சொல்கிறது. இதனை முதுபெரும் எழுத்தாளர் அசோகமித்திரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

5. இதுபோன்ற பிரச்னைகளில் தீர்வை அடைவது எப்படி?

குறிப்பிட்ட கலைப்படைப்பினால் மனம் புண்பட்டவர்களும் படைப்பிலக்கியத்தை உருவாக்கியவர்களும் உரையாடலில் ஈடுபடலாம்; தேவைப்பட்டால் மட்டும் அரசு இதில் தலையிடலாம்; சுமுகமாகப் பேசி, வரலாற்றில் இலக்கியத்தின் இடத்தைப் புரிந்துகொள்ளச் செய்ய முயற்சிக்கலாம். சமாதானம் எட்ட முடியாதபோது நீதிமன்றத்தில் வழக்காடலாம். நீதிமன்றங்கள் இதில் பெரும்பான்மைவாதத்துக்கு இடமளிக்காமல் உண்மைக்கும் நியாயத்துக்கும் கட்டுப்பட்டு தனிநபரின் அரசியல் சாசன உரிமைகளைக் காப்பதற்கு முயற்சிக்கலாம்.