
பெரும் வெற்றிகளுக்குப் பின்னால் இருப்பவர்கள், சில நேரங்களில் வெளிச்சத்தை விரும்புவதில்லை. தமிழ்த் தொலைக்காட்சிகளை திரும்பி வர முடியாத அளவுக்கு ஓர் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கும் சீனிவாசனும் அப்படிப்பட்டவர்தான். தமிழில் வெளியான தொலைக்காட்சிகள் அனைத்தும் இந்த ஊடகத்தின் தனித்தன்மையான நேரலைகளையும் செய்தியாளர்களுக்கு முகம் கொடுப்பதையும் இரண்டு தசாப்தங்களாக குறைந்தபட்சம்கூட பயன்படுத்தவில்லை. செய்தியாளர்கள் என்கிற எளிய மனிதர்களுக்கு முகம் கொடுப்பது என்பது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்தி வழங்கலை ஜனநாயகப்படுத்தும் ஒரு நடைமுறைதான். தமிழ்த் தொலைக்காட்சிகளின் ஊடக அதிபர்கள், அதைக்கூட செய்ய மனமில்லாமல் இருந்தார்கள். இந்தக் குறைந்தபட்ச ஜனநாயகப்படுத்தலை தொடங்கி வைத்தவர் புதிய தலைமுறையின் முதன்மை ஆசிரியரான எஸ்.சீனிவாசன்தான்.
உரையாடலுக்கான ஊடகம் என்ற தனிச்சிறப்பைப் பெற்ற தொலைக்காட்சியில் தமிழக ஊடக அதிபர்கள், விவாத மரபை ஊக்குவிக்காமல் இருந்தார்கள். இதுபோன்று ஒரு நவீன ஊடகத்தை, நில உடமையின் எச்சம் மாறாமல் காத்து வந்த தமிழக தொலைக்காட்சி அதிபர்களுக்கு மத்தியில், சீனிவாசன் புரட்சிகர மாற்றங்களுக்கு அடிகோலினார். தமிழ்நாட்டை நேர்படப் பேசச் செய்ததன் மூலம் விவாத மேடைகளுக்கும் ஆயுத எழுத்துக்களுக்கும் வித்திட்டார். திரும்பிப் போக முடியாத மாற்றத்தை நோக்கி தமிழ்த் தொலைக்காட்சிகள் பயணப்பட ஆரம்பித்திருக்கின்றன. உள்ளடக்கமே பிரதானம், செய்தி செய்தியாக அணுகப்பட வேண்டும் என்ற புதிய மரபை தமிழக ஊடகச் சூழலில் அவர் நிலைநாட்டியிருக்கிறார். செய்தி அறையிலும் களத்திலும் சரிபாதி பெண்கள் இருக்க வேண்டும் என்ற முற்போக்கு சிந்தனை அவருக்கு இருக்கிறது. செய்திப் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையையும் சகித்துக் கொள்ள மாட்டார். செய்தியாளர்கள் யாரிடமும் கைநீட்டி காசு வாங்குவதும் அவரால் பொறுத்துக் கொள்ளப்படாத இன்னொரு காரியம்.
தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டிருந்தாலும் டெல்லியில் வாழ்ந்ததால், புதிய தலைமுறை தொலைக்காட்சியை ஆரம்பிப்பதற்காக தமிழகம் வந்தபோது அவருக்கு இது புதிய களம்தான். புதிய சூழலைப் புரிந்துகொள்வதற்காக முறையாக ஓர் ஆசிரியரை வைத்து தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார். தமிழ் நாளிதழ்களை சரளமாகப் படிக்குமளவுக்கு தமிழ் அறிவைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார். இப்போது புதிய தலைமுறையின் ஆங்கில செய்தி தொலைக்காட்சியை ஆரம்பிப்பதற்கான பணிகளில் மும்முரமாக இருக்கும் 52 வயதான இவருக்கு செய்தித் துறையில் 33 வருட அனுபவம் உண்டு. எகனாமிக் டைம்ஸ், தி டெலிகிராப், தி இந்துவின் பிசினஸ் லைன் ஆகிய நாளிதழ்களில் அரசியல், வணிகம், பாதுகாப்பு போன்றவை குறித்த செய்திகளை சேகரித்து வழங்கியிருக்கிறார். 2003 ஆம் ஆண்டில், ஆங்கில செய்தி தொலைக்காட்சியான ஹெட்லைன்ஸ் டுடேவை ஆரம்பித்து அதற்கு சுமார் நான்கு வருடங்களாக தலைமை ஏற்று நடத்தியவர். அதற்கு முன்பு இந்தி செய்தி தொலைக்காட்சிகளில் முதலிடம் வகித்த ஆஜ் தக்கின் உருவாக்கத்திலும் செய்தி உருவாக்கத்திலும் முதன்மைப் பொறுப்பு வகித்தவர். அச்சு ஊடகம், காட்சி ஊடகம் மட்டுமில்லாமல் புதிய ஊடகம் எனப்படுகிற இணைய ஊடகத்திலும் தடம் பதித்தவர் சீனிவாசன். 2009 ஆம் ஆண்டில் இந்தோ ஆசிய செய்தி சேவை (IANS) நிறுவனத்தின் புதிய ஊடகம் மற்றும் தொலைக்காட்சிப் பிரிவுக்கு தலைமை வகித்தவர். முதன்மை ஆசிரியராக மட்டும் அவருடைய அனுபவம், 17 ஆண்டுகளைக் கடந்து செல்கிறது.
1980 ஆம் ஆண்டு எம்.பி க்ரோனிக்கிள் என்ற நாளிதழில் சாதாரண செய்தியாளராக தனது செய்திப் பணியை ஆரம்பித்த சீனிவாசன் இந்தியாவின் முக்கிய வரலாற்றுத் தருணங்களைப் பற்றி செய்தி சேகரிக்கும் வாய்ப்பைப் பெற்றவர். பனிப் போரின் முடிவு, இந்து அடிப்படைவாதத்தின் எழுச்சி, கூட்டணி அரசியல், தாராளமயப் பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்ட நெருக்கடி போன்றவற்றை நெருங்கிக் கவனித்து செய்தி வழங்கியவர். தமிழ்ச் செய்தியாளர்கள் பலருக்கு முகம் கொடுத்த சீனிவாசன், மீண்டும் அதே பணியை தேசிய அளவில் செய்ய விழைகிறார். சில நட்சத்திரங்களே ஆக்கிரமித்து வரும் தேசிய ஆங்கில செய்தித் தொலைக்காட்சி வானில் பல நட்சத்திரங்களை சீக்கிரமே மின்னச் செய்யப் போகிறார்.
- பீர் முகமது